“பில்டர் சிகரெட்” என்பதெல்லாம் சிகரெட் கம்பெனிகளின் டுபாக்கூர் வேலை, எல்லா வகையான சிகரெட்டுகளாலும் கெடுதல்தான். பில்டர் சிகரெட்டால் எந்தவிதப் பயனும் இல்லை. அது ஒரு வியாபார தந்திரம் மட்டுமே என்பதை நிரூபிக்க மேலும் சில ஆண்டுகள் கழிய வேண்டி இருந்தது.
இப்படிப்பட்ட ஏகோபித்த எதிர்ப்புகளின் விளைவாக, மேற்கத்திய நாடுகளில் பிசினஸ் படுத்தவுடன், சிகரெட் கம்பனிகள் அடுத்த கட்டமாக ஆசியச் சந்தையைக் குறிவைத்துக் களம் இறங்கின.
ஆனால் அங்கும் வரிகள், சட்டங்கள் மூலம் சிகரெட் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டன.. பல நாடுகளில் சிகரெட் கம்பனிகள் மேல் வழக்குகளே தொடரப்பட்டன.. பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கொடுத்த பின்னர் சிகரெட் தொழில் நசிவடைந்து நொண்டியடிக்கத் தொடங்கியது.
ஆனாலும்…. அந்த இடைப்பட்ட காலத்திற்குள்….
1940-ல் நாஜி ஜெர்மனியில் தொடங்கிய சிகரெட்டுக்கு எதிரான போர், 1990களில் அமெரிக்காவில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்குள் உலகில் பல மில்லியன் மக்கள் சிகரெட்டால் தமது இன்னுயிரைப் பலி கொடுத்து விட்டார்கள். உடல்நலம் பாதிக்கபட்டார்கள். பல குடும்பங்கள் சிதைந்தன.
அரசும், மருத்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் உயிரில் எத்தனை அலட்சியமாக இருப்பார்கள் என்பதற்குப் புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தமே சான்று.
சினிமாப் படங்களில் நமது அபிமான நடிகர்கள் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும்போது, “புகைபிடித்தல் உடல் நலனுக்குக் கேடு” என்கிற எழுத்துக்களை ஓட விடுவதோடும்….
சிகரெட் பெட்டிகளின் மேல் “பாழாகிப்போன இதயத்தின் படத்தைப் போடுவதோடும்”……
“பொது இடங்களில் புகை பிடித்தல் குற்றம்” என்று சட்டங்களைப் போடுவதோடும்…..
நமது அரசுகளின் அளப்பரிய கடமை முடிந்துவிடுகிறது..
இந்த விஷயத்தில் இன்னொரு ஹிட்லர் எங்கிருந்து எப்போது வரப்போகிறாரோ?.... காத்திருப்போம்.
Comments
Post a Comment