சிகரெட்டுக்கு எதிராக இவ்வளவு வேலைகளையும் செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யத் தயங்கினார். காரணம், சிகரெட் விற்பனையின் மூலம் கிடைத்த வரி வருமானம்தான். உலகப் போரை நடத்த சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டார். (அரசியல்!)
அதற்குப் பிறகு- 1940, 1950களில் சிகரெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது. அதே சமயம் நுரையீரல் புற்றுநோய் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வந்ததது. அமெரிக்க விஞ்ஞானிகள் சிகரெட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், அமெரிக்கப் புகையிலை உற்பத்தியாளர் சங்கமோ இதைக் கடுமையாக மறுத்தது. எவ்வளவு பெரிய பிசினஸ்? எவ்வளவு பெரிய இலாபம்? அவ்வளவும் என்னாவது?
அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஆய்வுகளில் எலிகளைக் கூண்டில் விட்டு, சிகரெட் புகையைக் கூண்டில் செலுத்துவார்கள். சில மாதம் கழித்து எலிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும். ஆனால், எலிகளை வைத்து நடத்தும் ஆய்வு மனிதர்களுக்குப் பொருந்தாது எனச் சிகரெட் கம்பனிகள் சத்தியம் செய்து சாதித்தன. அதற்காக மனிதர்களைக் கூண்டில் அடைத்து வைத்து, சிகரெட் புகையை விட்டு ஆய்வு செய்யவா முடியும்? எனவே, அப்போதைக்கு அந்த வாதம் அமுங்கிப்போனது.
அறிவியலின் பக்கம் நின்றிருக்க வேண்டிய அமெரிக்க மருத்துவர்கள் சங்கமோ, சுயலாபம் கருதி சிகரெட் கம்பனிகளின் பக்கம் நின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில மருத்துவர்களே சிகரெட் விளம்பரங்களில் தோன்றி "சிகரெட்டில் கெடுதல் இல்லை" என விளம்பரம் செய்தார்கள்.
ஆனால்?.….
(இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்)
Comments
Post a Comment