விண்வெளி ஆராய்ச்சிகள் Part 1 | அறிவியல்

 அறிமுகம் (விண்வெளி ஆராய்ச்சிகள்) 

மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்திய விண்வெளி திட்டம் சுமார் 20 ஆண்டுகால தாமதத்துடன் துவங்கியது. இருந்தாலும், இந்தியா இன்று விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் முதன்மை ஆறு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. வெளி நாட்டு உதவி அதிகம் இல்லாத நிலையில் இந்தியா இந்தத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. பூமியை ஆய்வு செய்வதற்கும், தொலைதொடர்புக்குமான செயற்கைக் கோள்களையும், ஏவுகணைகளையும் உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா முழுமையாக பெற்றுள்ளது. 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களுக்கு இணையாக உள்ளன. சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தி செலுத்தப்பட்ட, பூமியை சுற்றி செயல்பட்டு வரும் செயற்கைக் கோள்களினால் விண்வெளி ஆய்வில் புரட்சி ஏற்பட்டுள்ளது. பூமியைச் சுற்றி வளிமண்டலம் இருப்பதால் பூமியிலிருந்து விண்வெளியில் உள்ள கோள்களை ஆய்வு செய்வதில் குறைபாடுகள் உள்ளன. ஆனால், வான் மண்டலத்திற்கு உயரே செலுத்தப்படும் விண்கலங்களில் பொறுத்தப்பட்டிருக்கும் கருவிகள் மூலம் பல கோள்களை நாம் துல்லியமாக பார்க்க முடியும். பூமியைச் சுற்றிவரும் செயற்கை கோள்களிலிருந்து விண்வெளியை மிகத்துல்லியமாக நாம் பார்க்க முடியும். 

அதேபோல், அங்கிருந்து பூமியையும் நம்மால் பார்க்க முடியும். இந்த செயற்கை கோள்களின் உதவியால் மனித இனம், இந்த பிரபஞ்சத்தை நன்றாக அறியவும், பூமியிலுள்ள சாமானிய மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கவும் உதவுகின்றன. ஏவுகணைகளின் சரித்திரம் ஆறாவது நூற்றாண்டிலிருந்தே துவங்கியது. அப்போது சீனப் பட்டாசுகளின் அம்சமாக, ஒரு சிறு வடிவமாக ஏவுகணை இருந்தது. பிறகு 1782ல் திப்பு சுல்தான் ஆங்கிலேயர் படைகளை எதிர்த்து ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஏவுகணைகளை பயன்படுத்தினார். அங்கிருந்து அது ஐரோப்பாவிற்கு பரவியது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும் மிகவும் திறமையான ஏவுகணைகளை உருவாக்கினர்.

அமெரிக்காவின் திரு.ஒவர்த் அவர்களும் முந்தைய சோவியத் யூனியனின் சியோல்காவ்ஸ்கி அவர்களும் ஏவுகணையின் என்ஜின்களையும் எரிபொருள்களையும் அறிவியல் பூர்வமாக உருவாக்கினார்கள். போர்க்கால தேவைகளினால் ஏவுகணைகள் சிறப்பாக இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி உருவாக்கிய V2 ஏவுகணைகளைக் கண்டு எதிரணி நடு நடுங்கியது. உலகப்போருக்கு பின்பு ஜெர்மனி நாட்டு ஏவுகணை நிபுணர்களை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் கவர்ந்து கொண்டனர். தங்களுடைய இராணுவ பலத்தை அதிகரிக்க இந்த இரண்டு நாடுகளும் கடுமையாக போட்டியிட்டன. இதனால், மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அவர்கள் தயாரித்தார்கள். 1957 அக்டோபர் 4ஆம் தேதி, விண்வெளியில் ஸ்புட்னிக் ஏவுகணையை செலுத்தி அது எடுத்துச் சென்ற, மனிதனால் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோளை பூமியைச் சுற்றி வரவைத்தது. இதையடுத்து அமெரிக்கா ஜெமினி ஏவுகணைகளை செலுத்தியது. இதன்பிறகு, இந்த ஏவுகணைகளில் மனிதர்களை அனுப்பி, பிறகு மனிதன் சந்திரன் மீது, கால் வைத்தது ஆகியவை, பெரிய நிகழ்வுகளாகும். வளர்ந்த நாடுகளில் ஏவுகணை வடிவமைப்பு மேம்பாடு சிறப்புப் பெற்று பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களை செலுத்தவும், சூரிய மண்டலத்தின் தொலைதூர பகுதிகளுக்கு விண்கலங்களை அனுப்பவும், தொழில்நுட்பம் உயர்ந்தது. 

அதிநவீன கருவிகளை ஏந்திச் செல்லும் இந்த செயற்கை கோள்களினால், நாம் விண்வெளியை மிக நேர்த்தியாக ஆய்வு செய்ய முடிந்தது. இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் பின் தொடர்ந்தன. அமெரிக்க உதவியோடு, ஜப்பானும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்தியா மட்டுமே, இராணுவம் அல்லாத அமைப்பில் தன்னுடைய விண்வெளி மேம்பாட்டை துவக்கியது. நம்முடைய அறிவியல் முன்னோடி Dr. விக்ரம் சாராபாய், விண்வெளி தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை மட்டுமல்லாமல், அவற்றை சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் அறிந்திருந்தார். 1960களின் பிற்பகுதியில் அவர், இந்திய விண்வெளி திட்டத்தை உருவாக்கினார். அதுவே, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அடிப்படையாயிற்று. 
 
Next..... கிராம ஆதார மையங்கள் (விண்வெளி ஆராய்ச்சிகள்)

Comments