சொந்தமாகத் தொழில் தொடங்க…. சொகுசாக வாழ! - 03 | கட்டுரை

 மூன்றாவது வகைச் சாமியாராக உருவெடுப்பது என்பது கொஞ்சம் கூடுதலான உழைப்பைக் கோரும் கடினமான விஷயம்தான். ஆனால் உழைப்புக்கேற்ற பலனை உங்களால் நிச்சயம் அனுபவிக்க முடியும்.



உங்களுடைய இந்தத் தொழிலுக்கு உறுதியாக சர்வதேச அளவில் மார்க்கெட் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சண்டைநடக்கும் நாடுகளுக்கிடையில் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு நோபல் பரிசு  பெறுவதற்கான  சாத்தியக்கூறுகள் கூட இருக்கின்றன. ரவிசங்கர், ஜக்கி, நித்யானந்தா, காலஞ்சென்ற வேதாத்திரி, பிரேமானந்தா போன்றோர் இதற்கு நல்ல உதாரணம்.

இந்தவகைச் சாமியாராக ஆகவேண்டுமெனில் சில வருடங்களுக்காவது கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கடுமையான தயார்படுத்தல்களை நீங்கள்  செய்தாக வேண்டும். 

பயப்படாத அளவுக்கும் உங்களைப் பக்குவப்படுத்துகிற அளவுக்கும் கொஞ்சம் ஆலோசனைகள் கீழே……

  1.  கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பகவத்கீதை, மகாபாரதம், ராமாயணம், தம்மபதம், ஈசாப் குட்டிக்கதைகள், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றை நெட்டுருப் போட்டுக் கொள்ளுங்கள். சில நேரங்களில் சம்ஸ்கிருத மூல சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. உங்களை பெரிய ஞானியாகக் காட்டிக்கொள்ள உதவும்
  2.  யோகாசனம் செய்வதுபற்றி தேசிகாச்சார் போன்றோர் நல்ல புஸ்தகங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அவற்றை வாங்கிப் படித்தபின் நாலைந்து ஆசனங்களைக் கலந்துகட்டி உங்களுக்கென்றே விசேஷமாக ஒரு சில ஆசனங்களையும் முத்திரைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். சிநேகாசனம், நமீதாசனம், திரிஷாசனம்  ஆதிமுத்ரா, பாதிமுத்ரா என்றெல்லாம் விதவிதமான பெயர்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பழகவும் செய்யவும் எளிமையாக இருப்பது முக்கியம். அப்போதுதான் நடுத்தரவர்க்க இல்லத்தரசிகளை உங்களது ரசிகர்கூட்டத்தில் சேர்க்கமுடியும்.
  3.  "சாமி கிருஷ்ணரின் இருநூறாவது பிறவி, ராமானுஜரின் நூத்திச் சொச்சமாவது ஜென்மம்" என்றெல்லாம் உங்களது அடிப்பொடிகளை வைத்துக் கடைத்தெருக்களில் கொஞ்சம் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கச் செய்வது நல்ல மார்க்கெட்டிங் உத்தி.
  4.  அடுத்த ஒரு முக்கியமான கட்டம் உங்களுக்கென்று ஒரு அறிவுஜீவி வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கொடுக்கிற காசுக்கு மேலே கூவுகிறவர்களாகப் பார்த்து,  அவர்களைக் கட்டி இழுத்துவந்து உங்கள் பிரச்சாரப்படையில் சேர்த்துக்கொண்டால், பிரச்சாரப்படை வலிமையாக இருக்கும். அதுதான் இந்தத் தொழிலுக்கு அடிப்படை அஸ்திவாரம்.

இப்போதைக்கு இதுவே போதும் என்று கருதுகிறேன். கோடு போடச் சொன்னால் ரோடே போடுகிற குணாதிசயவாதிகளுக்கு மட்டுமே இது ஒத்துவரும்.

விசிறி சாமியார், பீடி சாமியார், பிராந்திச் சாமியார் மாதிரி.... நீங்களும் ஒரு டிரேடு மார்க்கைத் தேர்ந்தெடுங்கள்.

Try… all the best!! 


சொந்தமாகத் தொழில் தொடங்க....சொகுசாக வாழ! - 01 | கட்டுரை


சொந்தமாகத் தொழில் தொடங்க…. சொகுசாக வாழ! - 02 | கட்டுரை

Comments