சொந்தமாகத் தொழில் தொடங்க…. சொகுசாக வாழ! - 02 | கட்டுரை

இந்த வகை சாமியாராவது மிகவும் சுலபம்.  முதலில்  ஊருக்குச் சற்று ஒதுக்குப் புறமான ஒரு நல்ல இடமாக செலக்ட் செய்து,, அந்தப் பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தையோ அல்லது ஒரு கரையான் புற்றையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தேர்வு செய்யப்பட்ட மரம் அல்லது புற்றுக்கு வாராவாரம் வெள்ளி செவ்வாய், நல்ல நாட்கள் கெட்டநாட்கள் என எல்லா நாட்களும் தண்ணீர் ஊற்றிக் கழுவுதல், அபிஷேகம் செய்தல், புத்தாடை அணிவித்தல் என அலப்பறை செய்யவேண்டும். ஆடையின் நிறம் வழக்கமாக மக்களிடம் பழகிப்போன சிவப்பு, மஞ்சள், வெள்ளை அல்லது கருப்பு நிறங்களில் இருப்பது நலம் பயக்கும். 



நீங்களும் அதே வகையிலான நிறத்தில் ஆடை அணியத் துவங்கவேண்டும். ஆறுமாதங்கள் தம் பிடித்துத் தொடர்ந்து செய்தால், நிச்சயமாக  ஓரிரு பெண் பக்தைகளாவது தேறுவார்கள். அவர்கள் மூலமாகப் பரப்புரை செய்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை விருத்தி செய்து கொள்ளவேண்டும்.. அப்புறமென்ன? அருள் வாக்குகளை அள்ளி விட வேண்டியதுதான்……. “குப்பைகளை முதலில் சுத்தம் செய்!" என்று நீங்கள் சொன்னால், மனக்குப்பை, உடல்குப்பை, உலகக்குப்பை, நினைவுக் குப்பை என்று சொல்வதாக பக்தகோடிகளே குறியீடு  உருவகங்களையெல்லாம் கற்பனை செய்து கொள்வார்கள்.  "உடலே கோயில்! உள்ளமே தெய்வம்!!" -இப்படி ஏகப்பட்ட கவிதைகளை மட்டும் அவ்வப்போது தடுமாறாமல் அள்ளி வீசுகிற அளவுக்கு நீங்கள் தேறிவிட்டால்…. உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும். இரண்டாவது வகை சாமியாராகப் புரமோஷன் அடைவதும் சுலபம்தான். 

நிறைய வீடியோக்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, அதன்படி கொஞ்சம் எளியவகை தியானப்பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தபடி "வாழ்க்கை வாழ்த்தான் ", “அத்தனைக்கும் ஆசைப்படு” “கதவைத் திறந்துவை காற்று வரட்டும்” என்பதுபோன்ற சுலோகங்களுடன் "டோண்ட் வொர்ரி..பீ ஹேப்பி"  வகை வாழ்க்கை உபதேசங்களை வாரி வழங்கவேண்டும்.  இந்தவகையில் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு ஜெயித்துவிட்டால்….. அத்தனைக்கும் ஆசைப்படு என்று நாம் யாருக்குச் சொன்னோமோ, அவர்களே நம்முடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைத்துவிடுவார்கள். இந்த இரண்டையும் தாண்டி, மூன்றாவது வகைச் சாமியாராக உருவெடுப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான காரியம். (பக்திப் பரவசம் இன்னும் கொஞ்சம்...)

Comments