சொந்தமாகத் தொழில் தொடங்க....சொகுசாக வாழ! - 01 | கட்டுரை

ஒவ்வொருவருடைய மனதுக்குள்ளும் ஓராயிரம் கனவுகள், கற்பனைகள், ஆசைகள். அம்பானி மாதிரி ஆகவேண்டும் என்பது அதில் ஒன்று. அப்படிச் சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேற நினைப்பவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதுவரையிலும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை முதலீடாகப் போட்டுத் தொழில் தொடங்கவே கூடாது. இப்போதைக்கு பணமுதலீடு இல்லாமல் தொடங்கி சக்கைபோடு போடக்கூடிய இரண்டு முக்கியமான தொழில்கள்- அரசியலும், ஆன்மீகமும்.  இதில் இரண்டாவது கொஞ்சம் சுலபமானதும், சொகுசானதும் கூட. 



அரசியல் தொழிலில் ஆரம்ப காலகட்டங்களில் போஸ்டர் ஒட்டுவது, கொடிபிடிப்பது, தொண்டைகிழிய "வாழ்க" கோஷம் போடுவது, கூனிக்குறுகிக் கும்பிடு போடுவது  போன்ற உடலுழைப்பிற்கான தேவைகள் அதிகம். சாமியாராவதில் அவ்வளவு சங்கடங்கள் இல்லை. முந்தைய காலம் மாதிரி ஆசைகள் அனைத்தையும் துறக்க வேண்டும்,, சந்நியாசம் கொள்ள வேண்டும், துறவறம் பூணவேண்டும் போன்ற கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமான பாலிசிகள் எல்லாம் இப்போதைய டிரெண்டில் மிஸ்ஸிங் என்பதால் தைரியமாகக் களம் இறங்கலாம்.

சாமியார் தொழிலிலிலும் கூட மூன்று வகையான சாமியார்கள் இருக்கிறார்கள்.  நம்முடைய தகுதிக்கு ஏற்றவாறு எந்த டைப் நமக்கு வசதி என்பதை பிற்பாடு முடிவு செய்து கொள்ளலாம். முதலாவதுவகை சாமியார்கள் நம்ம ஊரின் கிராமத்துக் கோயில்களில் இருக்கும் பூசாரிகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி.  அதிகமான தத்துவங்களைச் சொல்லிக் 'காண்டு' ஏத்தாமல் எளிமையான அருளுரைகளை மட்டுமே வழங்கினால் போதும்.  உதாரணமாக….. 

"போடா, போய் வீட்டைக்கவனி... நாட்டைக்கவனி..  புள்ளை குட்டிகளைப் படிக்கவை... தாயை வணங்கு. மனைவிதான் சக்திஸ்வரூபம்!" 

(பக்திப் பரவசம் இன்னும் தொடரும்...)

 சொந்தமாகத் தொழில் தொடங்க....சொகுசாக வாழ! - 01 


Comments