அதிபுத்திசாலி - ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.
குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.
இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.
இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார். முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான். முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.
இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.
இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம் !!
Comments
Post a Comment