Agaramuthali Thamizh
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன் எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: புஹாரி-1364
தற்கொலை என்பது ஒரு ஆண் அல்லது பெண் தன்னை தானே சுய விருப்போடு கொலைசெய்திடும் முறையாகும். ஆங்கிலத்தில் Suicide எனப்படும் இச்சாவு முறை சூசைடு என்ற இலத்தீன் மொழிச் சொல்லான சூசைடியம் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் அம்மொழியில் இதற்கு தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளல் என்பது பொருளாகும்.
உலகில் கிட்டத்தட்ட 800000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறப்பதாககுறிப்பிடுகின்றது. மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78% மான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான தற்கொலை முயற்சிகள் நிகழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் தற்கொலைக்கான காரணங்கள் வேறுபடுவது போலவே அதற்கான வழிமுறைகளும் சாதனங்களும் வேறுபடுகின்றன.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் முற்றாக தடுக்கப்பட்ட ஒரு விடயமே இந்த தற்கொலையாகும். இறைவனின் நியதிகளை (கலாகத்ர்) நம்பாத அவனது சோதனைகள் மீது அதிருப்தி அடைந்த அசாதாரண முடிவே இந்த தற்கொலையாகும். இங்கு தற்கொலை என இஸ்லாம் குறிப்பது பருவ வயதையடைந்த புத்தி சுவாதீனமுள்ள ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு உடல் ரீதியாக உளரீதியாக ஏற்பட்ட காயத்திற்காக, வலிக்காக, நிகழ்வுக்காக தன்னை கொலை செய்ய முடிவெடுப்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 6606
எனவே மேற்தந்த அறிவிப்பின் பிரகாரம் ஒருவன் இறை மார்க்கத்திற்காக அளப்பரிய பணியாற்றினாலும் கூட அதனால் ஏற்படும் காயங்கள் வலிகளை பொறுக்க முடியாமல் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் அவனது அர்ப்பணிப்பு மிக்க செயல்களுக்கான மறுமை இலாபங்களை முற்றிலும் அவன் இழந்து நட்டவாளியாகி விடுவான் என எச்சரிக்கின்றது. மேலும் இவ்வாறான தற்கொலை முடிவுகள் மறுமையில் எவ்வாறான தண்டனையை தருமென இஸ்லாம் கடுமையாக பின்வரும் நபி மொழிகள் மூலம் எச்சரிக்கிறது.
“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365
“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.
யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.
யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)
மேலும் தற்கொலை செய்துகொண்ட ஜனாசாவுக்காக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஜனாசா தொழுகை தொழுவிக்கவில்லை என்பது தற்கொலை தொடர்பான கடுமையான மார்க்க நிலைப்பாட்டை உணர போதுமானதாகும்.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.
நூல்: முஸ்லிம் 1779
எனவே சுயகெளரவத்தின் பெயரிலோ, விரக்தியில் தனது சுய வலிக்காகவோ சுயநலமாக தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வழிமுறையை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. என்பதை நாம் புரிதல் அவசியமாகும்.
ஆனால் போரியல் உத்தியாக தனது மார்க்க இலட்சியத்தை மேலோங்க வைக்க எதிரிகளை அச்சப்படுத்தி அழிக்க நினைக்கும் தாக்குதல்களையும் சிலர் தற்கொலை என கற்பிதம் செய்ய முடியுமா? என்பதில் நோக்கத்தின் அடிப்படையிலும் குறித்து நபரின் இலக்கின் அடிப்படையிலும் பார்க்குமிடத்தில் முடியும் எனவும் முடியாதெனவும் இரு வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க கிருபையுடையவன்.
எம்.யூ.ஏ.ரஹீம்.
📲 பதிவிட, மேலதிக விபரங்களுக்கு
0777516918
💁♂️ இக் குழுமத்தில் இணைந்துகொள்ள ________
Comments
Post a Comment